Sunday, January 29, 2006

உங்களுக்கு எந்த நரகம்!




ஒரு இந்தியர் இறந்த பிறகு நரகத்திற்குப் போனாராம். அங்கே ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு விதமாக தண்டனைகள் இருந்தன.

முதலில் ஜெர்மன் நாட்டு நரகத்தில் எட்டிப் பார்த்த நம்ம ஆள் அங்கே எப்படி தண்டனை என்று விசாரித்தாராம். " இங்கே முதலில் ஒரு மணி நேரம் உங்களை மின்சார நாற்காலியில் உட்கார வைப்பார்கள். பின்னர் ஆணிகள் படுக்கையில் அடுத்த ஒரு மணி நேரம் படுக்க வைப்பார்கள். அதன் பின்னர் ஜெர்மனிய சாத்தான் வந்து உங்களை சாட்டையால் நன்றாக விளாசுவான்." என்று பதில் வந்தது.

நம்ம ஆள் இந்த ஜெர்மன் நரகம் வேண்டாம் என்று நகர்ந்து ரஷ்ய நரகத்துப் பக்கம் போய் விசாரித்தார். அங்கும் இதே ரீதியில் பதில் வந்தது. பின்னர் அமெரிக்க, இங்கிலாந்திய நரகங்களிலும் இதே வகைதான்.

கடைசியில் நம்ம நண்பர் இந்திய நரகத்தில் போய் நின்றார். அங்கே பெரிய வரிசை; மனிதர்கள் முண்டியடித்து நின்று கொண்டிருந்தனர். சரி. இங்கே எப்படி தண்டனையாம் என்று விசாரித்தவருக்கு பதில் மற்ற நரகங்களைப் போலவே வந்ததாம். இவருக்கு ஒரே வியப்பு. "பின்னே, எதற்காக இப்படி எல்லோரும் வரிசையாக இங்கேயே வருகிறார்கள் - மற்றவற்றை விட இதில் வித்தியாசம் எதுவும் இல்லையே?" என்று கேட்டார்.

பதில் வந்தது. "அதுவா? மின்சார நாற்காலி தண்டனை உண்டுதான். ஆனால் மின்சாரம் நின்று போய்விடும்; முள் படுக்கையில் இருந்த எல்லா ஆணிகளையும் யாரோ புண்ணியவான் திருடிக் கொண்டு போய்விட்டான். கடைசியில் உள்ளே வந்து சாட்டையடி கொடுக்க வேண்டிய சாத்தான், வந்து ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே டீ குடிக்க சென்று விடுவான்." !!!

Thursday, January 12, 2006

நியாயத்தீர்ப்பு.

வக்கீல் ஒருவர் இறந்த பின் நரகத்துக்கு சென்றார். அங்கு எமனின் வாசலில் நீண்ட வரிசை காத்து நின்றது. அதில் அந்த வக்கீல் கடைசி ஆளாக போய் நின்று கொண்டார்.

அவரைப் பார்த்ததும் எமன் ஓடோடி வந்து அழைத்துச் சென்றார்.

"எனக்கு இவ்வளவு மரியாதையா? அது சரி! என்னை எதிர்கொண்டு அழைக்க வந்தது ஏன்?" என்று எமனிடம் வக்கீல் கேட்டார்.

"இதுவரை கூறிய ஏராளமான பொய்களுக்காக 10 ஆண்டுக்கு முன்னரே இங்கு வரவேண்டிய ஆள், நீங்கள். அதனால்தான் உங்களை மேலும் காக்க வைக்கவில்லை" என்று கூறிய எமன், அந்த வக்கீலை நரகத்தில் தள்ளினான்.

Wednesday, January 11, 2006

"கில்லெட்டின்"


'கில்லெட்டின்'


பிரெஞ்சு புரட்சியின்போது 'கில்லெட்டின்' என்ற தலை வெட்டும் கருவி மூலம் மரண தண்டனை நிறைவேற்றும் நேரம்.

ஒரு பாதிரியார், ஒரு வக்கீல், ஒரு மெக்கானிக் ஆகிய 3 பேர் மரண தண்டனைக்காக நிறுத்தப்பட்டனர்.

முதலில் பாதிரியார் முறை. அவர், "மேலே சொர்க்கம் இருப்பதால் நான் எனது தலையை மேல் நோக்கியபடி கில்லெட்டில் வைக்கிறேன்" என்றார்.

கில்லெட்டின் பிளேடு இறக்கப்பட்டது. ஆனால் பாதிரியாரின் தலை அருகே வந்து நின்று விட்டது. "இது ஏதோ கடவுள் அதிசயம்" என்று நினைத்த அதிகாரிகள் அவரை விடுதலை செய்துவிட்டனர்.

அடுத்து வக்கீல். அவரும் "என்னதான் நடக்கிறது என்று பார்த்து விடலாமே" என்று நினைத்து தலையை மேலே பார்த்தபடி வைத்தார்.

இந்த முறையும் கத்தி பாதியிலேயே நின்று விட்டது.

"ஒரே ஆளுக்கு இரண்டு முறை தண்டனை விதிக்க முடியாது" என்று வாதாடி அவர் விடுதலை பெற்றார்.

இறுதியாக மெக்கானிக் முறை.

அவரும் தலையை மேலே பார்த்தபடி கில்லெட்டினில் தலையை கொடுத்தார். மேலே பார்த்த அவர், "மடையர்களா! கில்லெட்டினில் ஒரு வயரை தப்பாக மாட்டி இருக்கிறீர்கள். அதனால்தான் கத்தி இறங்கவில்லை. அதை சரி செய்யுங்கள்" என்றார்.

அதுதான் அவர் கடைசியாக பேசியது!